கவிதை

காலம்

கடனென்று யார்தருவார் காலத்தை இப்புவியில்

நடந்தன்றோ செல்கிறது நாடாது கடந்ததெல்லாம்

கட்டிவிட முடியாது கடக்கின்ற காலத்தை

எட்டிவிட இயலாது இன்றே எதிர்காலத்தை..!

ஆகாத காலமின்று ஆட்டித்தான் படைக்குதன்றோ

போகாதே வெளியினிலே பொல்லாநோய்த் தொற்றுமன்றோ

சீராகும் நாள்வருமே செத்தொழியும் நுண்கிருமி

பாராத உறவுகளைப் பார்த்திடலாம் மனமுருகி..!

இராகுண்டு குளிகையுண்டு இடறவைக்கும் காலமிவை

நிராகரிப்பின் வேதனையே நித்தமிதை நினைவினில்வை

போறாத காலமுண்டு பொல்லாத நட்பினாலே

சேராதே சீரழிக்கும் சிந்தையில்வை சிறப்பாயே..!

நிலையில்லா காலமிதில் நிலைபெற்று வாழ்ந்திடவே

மலைத்திருக்க உழைத்திருப்பாய் மாலைதோள்

சேர்ந்திடவே

நிகழ்காலம் ஒன்றேதான் நிதர்சனப் பொற்காலம்

அகமகிழ வாழ்ந்துவிடு அதுவேதான் எதிர்காலம்..!

காலமெனும் சக்கரத்தில் காண்பாயே இறக்கங்களும்

பாலமிடு நம்பிக்கைக்கு பையவரும் ஏற்றங்களும்

ஞாலமிதில் சிறந்திடவே ஞானமதை பெருக்கிடுவாய்

கோலமெழில் வாழ்வுகண்டு கொண்டாடி மகிழ்ந்திடுவாய்..!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top