சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா

ஆம்...

இந்தியாவில் கடந்த மாதம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக  59 சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் பப்ஜி உள்ளிட்ட 47 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் எல்லைப் பிராந்தியமான லடாக்கில் சீனா ஊடுருவலுக்கு பின்னர் மத்திய அரசு பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி 59 சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

மேலும் பொழுதுபோக்கு சம்மந்தமான செயலிகளை பயன்படுத்த கூடாது என ராணுவ வீரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. 

இந்நிலையில் PUBG உள்ளிட்ட மேலும் 47 சீன செயலிகளை தடை விதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றில் முன்னர் தடை செய்யப்பட்ட செயலிகளின் லைட் வெர்ஷன் ஆக கூறப்படும் டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர் இட் லைட், பிகோ லைட் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கலாம் என தெரிகிறது. 

இந்த செயலிகள் பட்டியலில் அலிபாபா குழுமத்தின் பப்ஜி இடம்பெற்று இருக்கிறது. பப்ஜி மொபைல் கேம் தடை பரிசீலனை விவகாரம் தற்சமயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இருப்பினும் செயலிகள் தடை விதிக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக்கை போலவே பப்ஜி கேம் செயலியும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது. இந்தியாவில் மட்டும், இந்த செயலியை 175 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். 

இந்த செயலி இளைஞர்களை அடிமையாக்குவதாக கடந்த காலங்களில் பல முறை கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top