கவிதை

பெண்ணென்றால் இப்படியா???

ஆண் வாரிசை தேடிய

அப்பாவின் முயற்சியில்

அடுத்தடுத்து

மண் அள்ளி போட்ட

மூன்று மூதேவிகளில்

முதலாவது மூதேவி நான்!

அப்பா அல்ப ஆயுசில் போனதால்

அடுத்தடுத்து மூதேவிகளின் படையெடுப்பும் நின்றுபோனது!

முதல் தங்கைக்கு

எனக்கு முன்னே ஆண் துணை தேவைப்பட்டதோ என்னவோ

யாருக்கும் தெரியாமல்

காதல் திருமணம் செய்துகொண்டு,

எல்லோருக்கும் தெரியும்படி வாழாவெட்டியாய் திரும்பி வந்தாள்!

இரண்டாவது தங்கை

பிறக்கும்போது சிறிய ஊனத்துடன் பிறந்துவிட்டாள்!

உயிரோடு சேர்த்து

அப்பா ஊதியத்தையும்

எடுத்துச்சென்று விட்டதால்

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு

Export கம்பெனியில்

துணி மடிக்க சென்றுவிட்டேன்!

பதினைந்து வருட உழைப்பில்

இரண்டு தங்கைகளுக்கும்

திருமணம் செய்துவிட்டு

திரும்பி பார்க்கிறேன்,

இன்று என்னை திரும்பிப்பார்க்க

எந்த ஆண்மகனும் இல்லை!

ஒரு நாள் குளித்து முடித்ததும்

கண்ணாடி முன் நின்றேன்!

இடையை கடந்தும்

ஆடிக்கொண்டு இருந்த கூந்தல்

இப்போது தோள்வரை மட்டுமே தொங்கிக்கொண்டு இருந்தது!

முன் நெற்றியில் விழுந்து

முகம் மறைத்த முடியெல்லாம்

வறண்டு விழுந்திருந்தது!

கொஞ்சம் பின்னால் இருந்த

முடியெடுத்து மூடி மறைத்தேன்!

காணாமல் போன

அடர்த்தியான புருவங்களை

மையிட்டு மறைத்தேன்!

கண்களுக்குள் விழுந்த

பல்லாங்குழியை

கலர் பவுடரால் நிரப்பினேன்!

சுருக்கத்தை மறக்க ஒரு cream!

கருப்பை வெளுக்க fare & lovely!

வயதை குறைத்து காட்ட

முதுகு பக்கம் ஜன்னல்!

உலர்ந்துபோன உதடுக்கு

உயிர்கொடுக்க

விதவிதமான சாயங்கள்!

கொஞ்சம் எடுப்பாய் தெரிய

heels வைத்த செப்பல்கள்!

இப்படி என்னென்னவோ

செய்து பார்த்தாலும்

யாரோ ஒரு ஆணை

ஏமாற்றப்பார்க்கிறேன் என்ற

குற்றஉணர்ச்சி மட்டும்

போகவே இல்லை!

பருவம் வந்த காலத்தில்

என்னை பார்க்க

நிறையபேர் இருந்தார்கள்

கர்வமாக இருந்தது!

பருவம் போனதும்

பார்க்க ஆளில்லை

கர்வத்தோடு சேர்த்து

தன்னம்பிக்கையும் போகாமலிருக்க Hindustan lever ரோடு

போராடிக்கொண்டு இருக்கிறேன்!

என்னிடம் அன்போடு பழகும் ஒவ்வொரு ஆணையும்

ஒரு வேளை இவன்தான்

கணவனாக வருவானோ என்று

கட்டில் வரை இழுத்துச்சென்று

பின் கனவுக்கு தாழ்பாள் இட்டு

வெளியே விரட்டுகிறேன்!

பேருந்தில் யார் உரசினாலும்

முன்போல் கோபம்கூட

வருவதில்லை!

வயதுக்கு வந்து

இருபது வருடம்!

வாழலாம் என்று

அரசாங்கம் அறிவித்த

வயதிலிருந்தும்

பதிமூன்று வருடம்!

இப்படி எல்லா தகுதிகள்

இருந்தும் பாரம் சுமக்கும் முதல் பெண்ணாய் பிறந்தது தான்

நான் செய்த பாவமா !?

ஆண் வாரிசை தேடும்

ஆண்களுக்குகூட அந்த ஆணை

பெற்றுத்தரக்கூடிய தகுதியை

பெண்களுக்கு தான்

கொடுத்திருக்கிறான் என்பது

ஏன் புரிய மறுக்கிறது!?

ஆண் வாரிசுக்கான தேடலில்

மிதிபட்டு அழிந்துபோகும் பெண்ணினத்தின் வலியை

மாதந்தோறும்

விலக்கமுடியாமலும்

விளக்கமுடியாமலும் கருவறுத்துக்கொண்டு இருக்கிறேன்

கருவாகாமலே.....


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top