கவிதை

முதுமை

யாரோ ஒருவரின்

மனம் விரும்பியவளாக

அவள் இருந்திருக்க கூடும்

யாரோ ஒருவரின்

உள்ளத்தை ஆட்சி செய்த

இளவரசியாக

அவள் இருந்திருக்க கூடும்

யாரோ ஒருவரின்

வாழ்க்கையை அலங்கரித்த

கவிதையாக

அவள் இருந்திருக்க கூடும்

யாரோ ஒருவரின்

பிறப்பின் அர்த்தமாக

அவள் இருந்திருக்க கூடும்

யாரோ ஒருவரின்

சுமை தீர்த்த சுகமாக

அவள் இருந்திருக்க கூடும்

யாரோ ஒருவரின்

வாழ்க்கை பாதையின்

பயண துணையாக

அவள் இருந்திருக்க கூடும்

சிறுநீரும் மலமும் சேர்ந்து

பேருந்து நிலைய நடைபாதையோரம்

ஈக்கள் மொய்த்து கொண்டிருக்கும்

போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் அவளை பார்த்தபடி மூக்கினை கைக்குட்டையால் இறுக அடைத்துகொண்டு கடந்து போகும்

உங்களுக்கு எப்படி சொல்வேன்

அவளுக்கு

அழகான மகள்

இருந்திருக்க கூடும்

அன்பான மகன்

இருந்திருக்க கூடும்

எல்லாமுமான

கணவன் இருந்திருக்க கூடும்

மகிழ்வான வாழ்வும்

இருந்திருக்க கூடும்

அவ்வளவு ஏன்

ஆதரவற்றவள் என்கிற

பெயரினை தாண்டி

அவளுக்கு அழகான

பெயரொன்றும்

இருந்திருக்க கூடுமென்று ...!


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top