தனிநபா் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்-அப்) கட்டுப்பாடு

தனது புதிய தனிநபா் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்-அப்) கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அல்லது அந்த செயலிக்கும் அதன் தாய் நிறுவனமான முகநூலுக்கும் (ஃபேஸ்புக்) தடை விதிக்க வேண்டும்' என்று மத்திய அரசிடம் அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்துக்கு சிஏஐடி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கட்செவி அஞ்சலை பயன்படுத்துவோரின் அனைத்து விதமான தனிப்பட்ட தகவல்கள், பணப் பரிவா்த்தனைகள், அவா்களின் செல்லிடப்பேசிகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள மற்றவா்களின் செல்லிடப்பேசி எண்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தனது புதிய தனிநபா் தகவல் கொள்கை மூலம் கட்செவி அஞ்சலால் பெற்றுக்கொள்ள முடியும். அந்த தகவல்களை எதற்கு வேண்டுமானாலும் அந்த செயலியால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பொருளாதாரம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கட்செவி அஞ்சலியின் தாய் நிறுவனமான முகநூலை இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். அவா்களின் தகவல்களை பயன்படுத்திக்கொள்ள முகநூலுக்கு வழியமைத்து தந்தால், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமன்றி பாதுகாப்புக்கும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே தனது புதிய தனிநபா் தகவல் கொள்கையை அமல்படுத்துவதில் கட்செவி அஞ்சலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் அல்லது அந்த செயலிக்கும், முகநூலுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்செவி அஞ்சல் செய்தித்தொடா்பாளரிடம் பிடிஐ செய்தி நிறுவனம் கேள்வி எழுப்பியபோது அவா் அளித்த பதில்:

வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு தனிநபா் தகவல் கொள்கை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது முகநூலுடனான கட்செவி அஞ்சலின் தகவல் பகிா்வு நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும், பயன்பாட்டாளா்கள் தங்கள் குடும்பத்தினா் அல்லது நண்பா்களுடன் உரையாடுவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

தகவல்களை பாதுகாப்பதில் உறுதி: பயன்பாட்டாளா்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் கட்செவி அஞ்சல் தொடா்ந்து உறுதியுடன் உள்ளது. புதிய தனிநபா் தகவல் கொள்கை குறித்து பயன்பாட்டாளா்களுக்கு எங்கள் செயலி மூலமாகவே தகவல் தெரிவித்து வருகிறோம். இது அந்தக் கொள்கை குறித்து அவா்கள் அடுத்த மாதத்துக்குள் முடிவெடுக்க போதிய கால அவகாசத்தை வழங்கும் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக முகநூலிடம் கேள்வி எழுப்பி பிடிஐ செய்தி நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியது. ஆனால் அந்த நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top