தற்போதைய செய்தி

கியூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்த அமெரிக்கா

இன்னும் சில வாரங்களில் பதவிக்காலம் முடிந்து கிளம்ப உள்ள அதிபர் ட்ரம்ப் க்யூபாவை பயங்கரவாத நாடாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கியூபாவில் கடந்த 1959-ல் புரட்சி மூலம் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைப் பிடித்தார். அதைத்தொடர்ந்து 1960-ல் அமெரிக்கா, கியூபா இடையிலான தூதரக உறவு முறிந்தது.

அத்துடன் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக அறிவித்த அமெரிக்கா அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வந்தது.

பயங்கரவாத ஆதரவாளராக அறிவித்ததன் மூலம் கியூபாவுடன் குறிப்பிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்களுக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா அபராதம் விதித்தது. கியூபாவுக்கான வெளிநாட்டு உதவிகளை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனையை தடை செய்தது.‌

இப்படி இரு நாடுகளுக்கும் இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை அமெரிக்கா நீக்கியது.

இந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடாக மீண்டும் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி பாம்பியோ நேற்று வெளியிட்டார். ஜனாதிபதி டிரம்பின் பதவி காலம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் அவர் கியூபாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களை மீண்டும் பயங்கரவாத ஆதரவாளராக அறிவித்ததற்கு அமெரிக்காவுக்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top