கட்டுரைகள்

தமிழர் அடையாளம் பனை மரத்துக்கு இத்தனை பெயர்களா.

உலகிலுள்ள மொழிகளுக்கு எல்லாம்  மூத்த மொழி ”நம் தமிழ் மொழி”.   நம் செந்தமிழ் எழுத்துக்கள்  முதன் முதலில் எழுதப்பட்டது பனை ஓலையில்தான் என்ற வகையில்  பனைமரம்  தமிழரின் அடையாளமாக உள்ளது.

தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் அடையளங்களை விடுவது இல்லை அதேபோல்,  மலேசியாவில், ஈழத்தில், மொரீசியஸ் தீவில், தென்னாப்பிரிக்காவில், என தமிழர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் தமிழகத்தில் உள்ளது போல் பனைமரமும் வளர்ந்தது.அதனால் தான் நமது முன்னோர்கள் பனை மரத்தை ‘கற்பக விருட்சம்’ என்று பெயரிட்டு அழைத்தார்கள்.

உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். பனை மரத்தை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

அறிவியல் சார்ந்த பனைமரம் தகவல்கள்:

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை  போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

பனை மரத்தின் 34 வகைகள் உள்ளன அவை:

1. ஆண் பனை 9. சீமைப்பனை 17. இடுக்குப்பனை 25. கொண்டைப்பனை

2.பெண் பனை 10. ஆதம்பனை 18. தாதம்பனை 26. ஏரிலைப்பனை

3. கூந்தப்பனை 11. திப்பிலிப்பனை 19. காந்தம்பனை 27. ஏசறுப்பனை

4. தாளிப்பனை 12. உடலற்பனை 20. பாக்குப்பனை 28. காட்டுப்பனை

5. குமுதிப்பனை 13. கிச்சிலிப்பனை 21. ஈரம்பனை 29. கதலிப்பனை

6.சாற்றுப்பனை 14. குடைப்பனை 22. சீனப்பனை 30. வலியப்பனை

7. ஈச்சம்பனை 15. இளம்பனை 23. குண்டுப்பனை 31. வாதப்பனை

8. ஈழப்பனை 16. கூறைப்பனை 24. அலாம்பனை 32. அலகுப்பனை

33. நிலப்பனை 34. சனம்பனை

உலக அரங்கில் பனை மரத்தின் மதிப்பு :

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைப்பதாகத் தகவல்.

உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

பனை மரத்தின் பயன்கள்:

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீரைத் தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வியர்குரு நீங்கும்.தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பனங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் அதிகரிக்கும்.

பதநீர் மகிமை

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாறுக்கு பதநீர் என்று பெயர். மேக நோய் (Syphilis) இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனம் பூவைச் சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்.பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தத இதனை சுட்டு சாப்பிடலாம்.பனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

வேலைவாய்ப்பு தரும் பனைமரம் :

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக  வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

பனைத் தொழிலாளர்கள், வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். ஆகவே, அரசு கவனத்தில் கொண்டு பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனை மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும்.  செங்கல் சூளைகளுக்காகவும்,  லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

பனைமரம் பேசும் பண்டை தமிழ் வரலாறு:

”விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் : இல்லையேன்றால் உரம்”

என்பதற்கு ஏற்ப,  மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால், நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து,  மரம் வளர்த்தார்கள். இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.

பனை மரம் ஆண் பனை, பெண் பனை, கூந்தல்பனை உள்ளிட்ட பல பெயா்களில் அனைத்து நிலப்பரப்பிலும் வளர்ந்து வருகிறது. பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருகிறது. பொதுவாக பனை மரங்களில் சுமார் 60 முதல் 70 வருடங்களுக்குபின் முதிர்ச்சி பெற்றதும் மரத்தின் மேல்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு இலைகளும், பூக்களும் வெளிவரும். இந்த பூக்களில் இருந்து காய்கள் காய்த்து கொத்து கொத்தாக கீழே கொட்டுவது வழக்கம்.

இவ்வாறு பூக்களில் இருந்து காய்கள் வெளியாகும்போது பல்வேறு ஒலிகள் ஏற்படும். முதிர்ச்சி அடைந்த பனைமரங்கள் குலைகள் தள்ளி, பூக்களுடன் காய்களை வெளித்தள்ளும் பனைமரத்தினை கூந்தல்பனை என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் அனைத்தும் இதுபோன்று கூந்தல்பனைமரமாக மாறுவது கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள். அதிலும் குறிப்பாக தமிழர்   இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த பனை மரங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை மீட்க வேண்டியது தமிழர்களான நமக்கு மிகப் பெரிய கடமை ஆகும்.


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top