கட்டுரைகள்

மாசி மகம் சிறப்புகள்!

மாசி மகம் இன்று  கொண்டாடப்படுகிறது. மாசி மக நாளில் தீர்த்தமாடுவது “கடலாடி” எனப்படும். மறைந்த முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்ய உகந்த நாளாக  கருதப்படுகிறது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் நீங்க மாசி மகம் மிக சிறந்த நாளாகும்.

மாசி மகத்தன்று கோவிலில் தெய்வங்களை தெப்பக்குளம், நீர்நிலைகளில் நீராட்டுவார்கள். இது தீர்த்தவாரி என்று சொல்லப்படுகிறது. தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை. நீர் நிலைகளில் நீராட முடியாதவர்கள் அன்று சிவாலயங்களுக்கு சென்று சிவன் பார்வதியை தரிசித்தல் நன்று.

கும்பகோணம் மகா மகம் குளத்தில் மக்கள் அதிகாலை முதல்  புனித நீராடி இறைவனை வழிபடுவார்கள்.இந்த நாளில் சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வார்கள். அன்று சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார்.மகம் நட்சத்திரம் என்பது கேது பகவான் அதிபதியாக வரும் நட்சத்திரம் . இதற்கு “பித்ருதேவ நட்சத்திரம்” என்றும்  பெயர் உண்டு. இந்த நாளில் புனித தீர்த்தங்களில் நீராடுவது பிதுர் மஹாஸ்நானம் என்று கூறப்படுகிறது.

 சிம்ம ராசியில் குரு பகவான் மற்றும் சந்திரன் மக நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் காலத்தில் வரும் பௌர்ணமி நாளே மகா மகம் ஆக கொண்டாடப்படுகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். ஆண்டுதோறும் மாசி மகம் கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தட்சயாணியாக அவதரித்தார். மாசி மக நாளில் எம்பெருமான் மகாவிஷ்ணுவாக அவதாரம்  எடுத்த திருநாளாகும். பாதாளலோகத்தில்  இருந்து பூலோகத்தை பெருமாள்  வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் இதுவே. மாசி மகத்தன்று காமதகன விழா நடைபெறும்.மாசி மகத் திருநாளில் நெல்லையப்பர் கோவிலில் திருநாவுக்கரசருக்கு ” அப்பர்த்தெப்பம்” என்று தெப்ப விழா நடத்துவார்கள்.

முருகப்பெருமான் தன்னுடைய தந்தை சிவபெருமானுக்கு மந்திர உபதேசம் செய்வித்ததும் இந்த மாசி மாதத்தில் தான்.  ஆன் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்நாளில் முருக பெருமானை வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

திருக்கோஷ்டியூரில் ஸ்ரீ சௌமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி மக திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலில் மாசி மக கிணறு என்னும் சிம்ம கிணறு இருக்கிறது. இதில் மக நாளில் நீராடுவது சிறப்பு. மந்திர உபதேசம் வேண்டி திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களிடம் ஸ்ரீ ராமானுஜர் 18 முறை தேடி வந்து உபதேசம் பெற்றது இங்கு தான். மாசி மகத்தன்று இங்கு நடைபெறும் தெப்ப திரு  விழாவில் மக்கள் தங்களுடைய  வேண்டுதல்கள் நிறைவேற   தெப்ப குளத்தில் தீபமேற்றி வழிபடுவார்கள்.

உயர் கல்வி பயில நினைப்பவர்களும்,  ஆராய்ச்சி தொடர்பான படிப்பை படிக்க விரும்புபவர்களும் மாசி மக நாளில் அதனை தொடங்கினால்  தடையின்றி முடியும் என்பது  திண்ணம். அன்று செய்யும்  அன்னதானத்தின் மூலம் பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.மாசி மக நாளில் பெரும் மந்திர உபதேசம் பன்மடங்கு பலனை தரும்.

ராகுகேது தோஷம் மற்றும், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் புனித நீராடி சிவதரிசனம் செய்வதால் தடைகள் நீங்கும். மேலும் சதுரகிரி, திருவண்ணாமலை, பர்வதமலை, திருநீர்மலை,  திருக்கழுகுன்றமலை போன்ற ஸ்தலங்களில் கிரிவலம்  வருவதும் வாழ்வில் பல ஏற்றங்களை தரும்.

வடநாட்டில் இதனை கும்பமேளா என்ற விழாவாக கொண்டாடுகிறார்கள்.  சிவன், விஷ்ணு, முருகன் என்று மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மக நாளில் புனித நீராடி , மாசி மக புராணம் படித்து, பிதுர் கடன் செய்வதன் மூலம் நாம் முக்தியை பெற முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 


மேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

lanka4youtube

Back to Top